தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு உதய சூரியனைப் போல பிரகாசமாக இருக்கிறது; கருணாநிதி பேட்டி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப். 13- முதல்-அமைச்சர் கருணாநிதி கோபாலபுரம் சாரதா மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச் சாவடிக்கு 9.45 மணிக்கு வந்தார். அவருடன் தயாளு அம்மாள், சகோதரி சண்முகத்தம்மாள் ஆகியோரும் வந்தனர். முதலில் தயாளு அம்மாள் தனது வாக்கை பதிவு செய்தார். 9.55 மணிக்கு கருணாநிதி வாக்களித்தார். வாக்களித்து விட்டு வெளியில் வந்ததும் முதல்- அமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:- கேள்வி:- தமிழகச் சட்ட மன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு மிகவும் சொற்ப நாட்களே பிரச்சாரத்திற்கு வாய்ப்பு தரப்பட்டு, வாக்களிப்பும் இன்று நடைபெறுகிறது. தி.மு. கழகத்தின் வெற்றி வாய்ப்பு மக்கள் மன்றத்தில் எந்த அளவிற்கு இருக்கிறது? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? பதில்:- தி.மு.கழகத்தின் வெற்றி வாய்ப்பு உதய சூரியனைப் போல பிரகாசமாக இருக்கிறது. கேள்வி:- எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்? பதில்:- ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு வெற்றி பெறுவோம். கேள்வி:- தனியாக ஆட்சி அமைப்பீர்களா? கூட்டணி ஆட்சியா? பதில்:- தனியாகவும் வரலாம், கூட்டணி ஆட்சியாகவும் இருக்கலாம். கேள்வி:- தி.மு.கழகம் தேர்தல் அறிக்கையில் என்ன கூறியிருக்கிறதோ அதை பரவலாக தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசியிருக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை எங்கேயும் அவர்கள் பிரச்சாரம் செய்ய வில்லையே? பதில்:- அது தான் பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை. அவர்கள் என்னைப் பற்றித் தான் தாக்கிப் பேசினார்களே தவிர, அவர்களுடைய தேர்தல் அறிக்கையைப் பற்றி எங்கும் பேசியதாகத் தெரிய வில்லை. கேள்வி:- தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டது என்ற குற்றச்சாட்டைப் பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்:- தேர்தல் ஆணையம் எங்களைப் பொறுத்த வரையில் கடுமையாக நடந்து கொண்டதே தவிர - பாரபட்சமாக நடந்து கொண்டதாகச் சொல்ல மாட்டேன். ஒன்றிரண்டு இடங்களில் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதைப் பற்றிச் சொன்னால் அதிலே தவறு இல்லை என்பது என்னுடைய கருத்தாகும். கேள்வி:- தேர்தல் அதிகாரிகளைப் பயமுறுத்தியதாக ஒரு புகார் வந்திருக்கிறதே, அதைப் பற்றி? பதில்:- ஜெயலலிதா பய முறுத்தியதாகவா? அதைப் பற்றி அவரையே கேளுங்கள். கேள்வி:- வன்முறைக்கு தி.மு.க. முயற்சி செய்வதாகவும் நேற்று ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்களே? பதில்:- அதைப்பற்றி நான் விளக்கம் அளித்திருக்கிறேன். நேற்றைக்குக் கூட விக்கிரவாண்டி தொகுதியிலே தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவரை அ.தி.மு.க.வினர் கொலை செய்திருக்கிறார்கள் என்று செய்தி வந்துள்ளது. யார் வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். கேள்வி:- வாக்காளர்கள் எதை மனதிலே கொண்டு வாக்களிக்க முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பதில்:- தமிழகத்தின் நன்மையை - ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு வாக்களிப்பார்கள்
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.