கொளத்தூரில் உள்ள பார்வையற்ற மாணவியை நேரில் சென்று வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கொளத்தூரில் உள்ள பார்வையற்ற மாணவியை நேரில் சென்று வாழ்த்திய மு.க.ஸ்டாலின் சென்னை, ஏப்.18- கொளத்தூரில் உள்ள பார்வையற்ற மாணவியின் வீட்டுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் நெகிழ்ந்தனர். சென்னை கொளத்தூர் ராஜாஜி நகரில் வசிப்பவர் பெனோ. பார்வையற்ற கல்லூரி மாணவியான இவர் தற்போது பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். பார்வையற்ற மாணவி, பெனோ என்றதுமே அனைவருக்கும் ஞாபகம் வந்திருக்கும். ஆமாம், இவர் தான் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவியால் அமெரிக்காவுக்கு சென்று உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றவர். துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுவதுடன், அன்று மதியம் லிட்டில் பிளவர் கான்வென்டில் அன்னதானம் வழங்க செல்வது வழக்கம். அப்படி ஒரு முறை சென்ற போது தான் அங்கு முதல் முறையாக மு.க.ஸ்டாலினும், பார்வையற்ற மாணவி பெனோவும் சந்தித்தனர். அப்போதே மாணவி பெனோவின் அறிவும், ஆற்றலும் மு.க.ஸ்டாலினை கவர்ந்தது. பெனோ பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு சென்றார். அப்போது தான் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பெனோவிற்கு அழைப்பு வந்தது. அவருக்கு அமெரிக்கா சென்று அந்த மாநாட்டில் பேச வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தந்தை சாதாரண ரெயில்வே ஊழியர். தாயார் குடும்ப தலைவி. ஒரு அண்ணன் உண்டு, அவருக்கு திருமணமாகி விட்டது. தனது குடும்பத்தினரால் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்பதை உணர்ந்த பெனோவிற்கு திடீரென துணை முதல்வர் தன்மீது வைத்திருக்கும் பாசம் ஞாபகத்திற்கு வந்தது. மு.க.ஸ்டாலினுடன் தொடர்பு கொண்டு தனது ஆசையை தெரிவித்தார். உடனே துணை முதல்வர் அரசு சார்பில் ரூ.41/2 லட்சம் வழங்கி அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தார். அதோடு அமெரிக்காவில் அவருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அங்குள்ள தனது நண்பர்களிடமும் கூறியிருந்தார். பெனோ அமெரிக்காவுக்கு சென்று மு.க.ஸ்டாலின் நண்பர் வீட்டிலேயே தங்கினார். மாநாட்டில் அனைவரும் பாராட்டும்படி பேசினார். சென்னை வந்த உடனேயே துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், தான் மாநாட்டில் பேசியது குறித்தும் விளக்கினார். அன்று முதல் இருவருக்கும் இடையே இருந்த சகோதர பாசம் அதிகமானது. இந்த நிலையில் தான் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. தொகுதியில் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பெனோ அந்த இடத்திற்கு சென்று அவரை சந்தித்தார். தீவிர பிரசாரத்திற்கு இடையேயும், மு.க.ஸ்டாலின் பெனோவை பார்த்ததும் அழைத்து, நலம் விசாரித்தார். அப்போது, பெனோ `அங்கிள் எனக்கு ஏப்ரல் 17-ல் பிறந்த நாள். நீங்கள் கட்டாயம் வரவேண்டும்\' என்று அன்பு கட்டளையிட்டார். அதனை மனதில் குறித்துக்கொண்ட மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்கு முதல் நாளே பெனோவுக்கு போன் செய்து, நாளை உனது பிறந்த நாள், நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்று தகவல் தெரிவித்தார். இதைக் கேட்டு பெனோ உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார். கூறியபடியே நேற்று காலை மு.க.ஸ்டாலின் பெனோ வீட்டுக்கு சென்றார். அவரை பார்த்ததும், பெனோவின் குடும்பமே நெகிழ்ந்து வரவேற்றது. இதைப் பற்றி கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் அங்கு கூடிவிட்டனர். பெனோவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, கேக்கை மு.க.ஸ்டாலின் ஊட்டி விட்டார். ஆனந்த கண்ணீருடன் பெனோவும் ஸ்டாலினுக்கு கேக் ஊட்டினார். சுமார் ஒரு மணி நேரம் பெனோவின் வீட்டில் இருந்து அவருடன் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தார். படிப்பு எப்படி இருக்கிறது?, அடுத்து என்ன படிக்க ஆசைப்படுகிறாய் என்றும் விசாரித்தார். நன்றாக படிப்பதாகவும், ஐ.ஏ.எஸ். படிக்க ஆசைப்படுவதாகவும் பெனோ கூறினார். தனது சகோதரியை விசாரிப்பது போல ஸ்டாலின் விசாரிப்பதும், பழகுவதும் பெனோவையும், அவரது பெற்றோரின் நெஞ்சையும் நெகிழ வைத்தது. தனது சகோதரி போல் என்னை பாச மழையில் நனைய வைத்த தளபதியை எப்படி பாராட்டினாலும் தகும் என்று கூறிய பெனோ, தான் எழுதி வைத்திருந்த கவிதை ஒன்றை ஸ்டாலினிடம் வாசித்துக் காட்டினார். அந்த கவிதையை ஸ்டாலினும் ரசித்து கேட்டு, நன்றாக இருப்பதாக பாராட்டினார். பின்னர் பெனோவிடம் விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டு சென்றார். துணை முதல்வர் மீது இவ்வளவு பாசத்தோடு இருக்கிறீர்களே, அவரை பார்க்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு பெனோ கூறிய தத்துவம் அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ``எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம். அவரை நான் பார்க்க முடியாவிட்டாலும் அவரது குரல் எப்போதும் என் இதயத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும்\'\' என்றார் பெனோ.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.