மாணவர் தற்கொலை விவகாரம்: வியாசர்பாடி கல்லூரி மாணவ- மாணவிகள் திடீர் போராட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பெரம்பூர், ஏப். 18- செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரை சேர்ந்த தனபாலின் மகன் இளையராஜா (20). வியாசர்பாடி அம்பேத்கார் கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இளையராஜாவுக்கு கல்லூரி வருகை பதிவேட்டில் நாள் குறைவாக இருந்ததால் கல்லூரி இறுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் மனவேதனை அடைந்த இளைய ராஜா கடந்த 11-ந் தேதி இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இளையராஜா தற்கொலை குறித்து அறிந்ததும் மாணவ- மாணவிகள் ஆவேசமானார்கள். சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இறந்து போன மாணவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும், கல்லூரி நிர்வாகிகள் சந்திரசேகர், சத்தியமூர்த்தி, ரமேஷ் கண்ணன், நீலகண்டன், பிரேமா ஆகிய 5 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும் கல்லூரியை பல்கலைக் கழகத்துடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிவாரண உதவி கிடைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார். இதனை ஏற்று மறியலை மாணவர்கள் கைவிட்டனர். இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள்,இளையராஜா குடும்பத்துக்கு நிவாரண உதவி கிடைக்க வில்லை என்பதை அறிந்ததும் ஆவேசமானார்கள். 9 மணி அளவில் கல்லூரி முன்பு எருக்கஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் இளையராஜாவின் பெற்றோர் தனபால்- முனியம்மாள் ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர்கள் கோஷமிட்டனர். பெரும்பாலான மாணவர்கள் ரோட்டில் படுத்து உருண்டனர். சில மாணவர்கள் பிளேடால் கை, கழுத்தில் அறுத்துக் கொண்டனர். அப்போது ரத்தம் வழிந்து ஓடியதால் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் கோபி மனோகரன், மற்றும் 100-க்கும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினார்கள். ஆனால் மாணவர்கள் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் கல்லூரி நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்து சேர், டேபிள், கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். மேலும் வளாகத்திற்குள் நிறுத்தியிருந்த கல்லூரி பேராசிரியர்களின் மோட்டார் சைக்கிள்கள் மீது பெரிய கற்களை போட்டு உடைத்தனர். அப்போது சில மாணவர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இதில் 5-க்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைந்தது. நேரம் செல்ல செல்ல மாணவர்களின் போராட்டம் பெரிய கலவரமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். உடனே மாணவ-மாணவிகள் நாலா புறமும் சிதறி ஓடினர்கள். அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் கல்லூரிக்குள் புகுந்து தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படுகாயம் அடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அவர்களுடன் இளையராஜாவின் பெற்றோரும் கைதானார்கள்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.