நெல்லை வாலிபர் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்து பலி: வைகோ அஞ்சலி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நெல்லை, ஏப்.20- சங்கரன்கோவில் அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசுப்பு மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24) ராஜஸ்தானில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் இண்டர்நெட்டில் இலங்கை தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட படங்கள் வெளியானது. இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது அவரது மனதை பாதித்தது. இதனால் மனமுடைந்த கிருஷ்ண மூர்த்தி விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊரான சீகம் பட்டிக்கு வந்துவிட்டார். அங்கு வந்தும் தனது நண்பர்களிடம் இலங்கை தமிழர்களை அநியாயமாக கொன்றுவிட்டார்களே என்று கூறி அழுது புலம்பினார். 18-ந்தேதி காலை கிருஷ்ண மூர்த்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்ததற்கான காரணம் குறித்து அவரிடம் வாக்குமூலம் பெற போலீசார் முயன்றனர். ஆனால் அவரால் பேச முடியவில்லை. அன்று மாலையே கிருஷ்ண மூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் அன்று இரவே கிருஷ்ண மூர்த்தி உடலை தகனம் செய்தனர். நேற்று காலை கிருஷ்ண மூர்த்தி வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதனை அவரது பெற்றோர் பார்த்தபோது அந்த கடிதத்தை கிருஷ்ணமூர்த்தியே எழுதியிருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில் இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இது குறித்து கிருஷ்ண மூர்த்தியின் பெற்றோர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவித்தனர். உடனே அவர் நேற்று சீகம்பட்டியில் உள்ள கிருஷ்ண மூர்த்தி வீட்டுக்கு சென்று கிருஷ்ண மூர்த்தியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாவட்டம் குருவிகுளம் அடுத்த சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் கிருஷ்ணமூர்த்தி இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்துள்ளது. ஆனால் போலீசார் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்ததை மறைத்து, அவரால் எதுவும் பேச முடியவில்லை என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து உயிருக்கு போராடிய போது அவரது தாய் சுப்புலட்சுமி காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் சுப்புலட்சுமிக்கும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துள்ளது மிகப்பெரிய தியாகம். இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா.சபை தலைவர் பான்கீமூன் நேரில் சென்று விசாரிக்க இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. மேலும்ஐ.நா. சபையே இலங்கை படுகொலை குறித்து விசாரணை நடத்தி இது போர் குற்றம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர் நடக்கும்போது சர்வதேச விதிமுறைகளை மீறி ஆஸ்பத்திரிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இறுதிப்போரில் விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஐ.நா.சபையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவாக நடந்து கொண்டுள்ளது. சர்வதேச குற்றவாளியான ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு இந்தியா உதவுவது தலைகுனிவாக உள்ளது. இலங்கையுடனான உறவை இந்தியா முறித்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் தமிழர் படுகொலையில் இலங்கைக்கு ஆதரவு என்ற நிலையாவது கைவிட வேண்டும். இல்லையென்றால் தமிழர் படுகொலைக்கு இந்தியா ஆதரவு என்ற நிலை ஏற்பட்டு விடும். சமீபத்தில் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோற்றது. இதனால் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கப்பற்படையினர் பிடித்து கொன்று கடலில் வீசியுள்ளனர். பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். அப்போது அங்குள்ள பொதுமக்களும், மீனவர்களும் ம.தி.மு.க.வின் உன்னத நிலையை பாராட்டினார்கள். நான் தேர்தலில் ஏன்போட்டியிடவில்லை என்று யாரும் கேட்கவில்லை. இதன் மூலம் அரசியல் பொதுவாழ்க்கையில் எங்களுக்கே வெற்றி. இவ்வாறு வைகோ கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.