பிறந்தநாள் பரிசு வழக்கு: ஜெயலலிதா சி.பி.ஐ. கோர்ட்டில் நேரில் ஆஜராக தேவையில்லை; ஐகோர்ட்டு உத்தரவு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப். 20- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-96-ம் ஆண்டு முதல்- அமைச்சராக இருந்தபோது 1992-ம் ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலைகள் மற்றும் காசோலைகளை தனது சொந்த வங்கி கணக்கில் சேர்த்து கொண்டார். அரசு பதவியில் இருந்த ஜெயலலிதா இந்த தொகையை தனது சொந்த வங்கி கணக்கில் சேர்த்து கொண்டது ஊழல் தடுப்பு சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி அவர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகிய 3 பேரும் சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை கோர்ட்டு கடந்த 12-ந்தேதி தள்ளுபடி செய்தது. அத்துடன் வருகிற மே 11-ந்தேதி அன்று இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக 3 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், சி.பி.ஐ. கோர்ட்டில் மே 11-ந்தேதி அன்று நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும். சி.பி.ஐ. கோர்ட்டு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று 2 மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்திருந்தார். மேலும், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து சி.பி.ஐ. கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த மனுக்களை நீதிபதி கே.என். பாட்ஷா விசாரித்தார். ஜெயலலிதா தரப்பில் வக்கீல் சஞ்சய் ஏ. நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். இதை தொடர்ந்து சி.பி.ஐ. கோர்ட்டில் ஜெயலலிதா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிபதி கே.என். பாட்ஷா உத்தரவிட்டார். அதே நேரத்தில் சி.பி.ஐ. கோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்பவும் உத்தர விட்டார். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜுன் 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.