ஆவின் பால் பண்ணையில் தீ விபத்து; பால் பவுடர் குடோன் எரிந்து சாம்பல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருப்போரூர், ஏப். 21- சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் ஆவின் பால்பண்ணை உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தினமும் 3 1/2 லட்சம் லிட்டர் பால் இங்கிருந்து வினியோகிக்கப்படுகிறது. இதேபோல் இங்கு பால் பவுடர், வெண்ணை உள்ளிட்ட பால் பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக சப்ளை செய்யப்படுகிறது. பால் பண்ணையின் பின்புறம் பால் பவுடர் மூட்டைகளை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இங்கு பாலிதீன் கவர்களும், நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இன்று பால் வினியோகம் முடிந்த பிறகு அதிகாலை 3 மணி அளவில் பால் பவுடர் குடோனில் திடீரென தீப் பிடித்து கொண்டது. அந்த அறைக்கு வெளியே கிடந்த வேஸ்ட் பாலிதீன் கவர்கள் அட்டைகளில் பிடித்த தீ மளமளவென குடோனுக்குள் பரவியது. இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். பிளாஸ்டிக்கில் ?தீ? பிடித்ததால் அவர்களால் எளிதில் அணைக்க முடியவில்லை. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பால் பவுடர் குடோன் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. கீழ் தளத்திலும், முதல் மாடியிலும் தீ எரிந்து கொண்டிருந்த நிலையில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் திருவான்மியூர், ராஜ்பவன், மறைமலைநகர், அசோக் நகர், சிறுசேரி சிப்காட் உள்பட பல பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவாத வகையில் பக்கத்து அறையில் இருந்த பால் பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ எரிந்த குடோனில் பிளாஸ்டிக் ?பை? நிறைய கிடந்ததால் வேகமாக எரிந்தது. இதை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு படையினர் திணறினார்கள். சுமார் 7 மணி நேரம் போராடி காலை 10 மணிக்குதான் தீயை முழு வதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானதுடன் அந்த கட்டிடமே முற்றிலும் சேதமடைந்து விட்டது. சேத மதிப்பு விவரங்களை தீயணைப்பு படையினர் கணக் கெடுத்து வருகிறார்கள். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். தீ விபத்து பற்றி கேள்விப்பட்டதும் ஆவின் நிர்வாக இயக்குனர் ஆபூர்வவர்மா, இணை நிர்வாக இயக்குனர் (பொறுப்பு) முனி ரத்தினம், மக்கள் தொடர்பு அதிகாரி வாசு மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தீப்பிடித்த இடத்திற்கு அருகே ஜெனரேட்டர் மற்றும் டீசல், ஆயில் டேங்க் இருந்தது. இதையும் அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபற்றி ஆவின் உயர் அதிகாரி கூறுகையில், தீ விபத்து காரணமாக பால் சப்ளையில் எந்த தடங்களும் ஏற்படாது என்றார். இன்று அதிகாலை 3 1/2 லட்சம் லிட்டர் பால் சப்ளை முடிந்த பிறகு தான் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பால் சப்ளையில் பாதிப்பு ஏற்பட வில்லை. நாளையும் வழக்கம் போல் இங்கிருந்து 3 1/2 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்து விடுவோம் என்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.